Skip to main content

Advertisement

வகுப்பறையில் ரம்பத்தால் தாக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி தற்போது எப்படி இருக்கிறார்? தாயார் தகவல்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 பார்வதம்மா
BBC
கோபிகாவின் தாய் பார்வதம்மா

இந்த கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

"இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. கட்டுப்பாடற்ற நாயைப் போல நடந்துகொள்வது மிகவும் தவறானது" என்று பார்வதம்மா கூறினார்.

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு பள்ளியில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோபிகாவின் தாய்தான் பார்வதம்மா.

தனது மகள் மீதான தாக்குதல் குறித்து அவர் மிகுந்த கவலையில் உள்ளார்.

அக்டோபர் 31ஆம் தேதி, ராப்தாடுவில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் கோபிகா என்ற மாணவியின் வகுப்பறைக்குள் ஹேமந்த் என்ற நபர் நுழைந்து, மின்சார ரம்பத்தால் அவரைத் தாக்கினார். இதில் கோபிகா படுகாயமடைந்தார். தாக்குதலைத் தடுக்க முயன்ற சக மாணவியான லட்சுமியும் காயமடைந்தார்.

தற்போது கோபிகா பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லட்சுமி அனந்தபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோபிகாவின் சிகிச்சை தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைத்து வருவதாகப் பார்வதம்மா தெரிவித்தார்.

"லோகேஷ் சார் உறுதியளித்துள்ளார். குழந்தைக்கு எதுவும் ஆகாது. எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார். அவரே சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்" என்று பார்வதம்மா கூறினார்.

மறுபுறம், ஆந்திரப் பிரதேசக் கல்வி அமைச்சர் லோகேஷும், அந்த மாணவியின் உடல்நிலை குறித்துப் பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

"மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது. செயற்கை ஆக்சிஜன் தேவை குறைந்துள்ளது. அவர் மென்மையான உணவுகளை உட்கொண்டு வருகிறார். சிறுமியின் முகத்தில் போடப்பட்டிருந்த தையல்களும் அகற்றப்பட்டுள்ளன. நெஞ்சுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிரெயின் குழாய் வழியாக வெளியேறும் திரவத்தின் அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மருத்துவர்கள் அவ்வப்போது அவரது உடல்நிலையைப் பரிசோதித்து வருகின்றனர்" என்று லோகேஷ் தனது சமீபத்திய எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ராம்பண்டாடியில் காயமடைந்த சிறுமி
FACEBOOK/SATYAKUMAR
ராம்பண்டாடியில் காயமடைந்த சிறுமி, கிரீன் சேனல் வழியாக பெங்களூருக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

'நான் வேலைக்கு சென்ற போது எனக்கு அழைப்பு வந்தது'

ஆந்திரப் பிரதேச அரசின் உத்தரவின் பேரில், தாக்குதல் நடந்த அன்றிரவு அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக அந்தச் சிறுமி பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆந்திரப் பிரதேசக் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சவிதா உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியைப் பார்வையிட்டனர்.

சிறுமியின் உடல்நிலையை அமைச்சர் லோகேஷ் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைப் பராமரித்து வரும் அவரது தாய் பார்வதம்மா நவம்பர் 12ஆம் தேதி பிபிசியிடம் பேசினார்.

அக்டோபர் 31ஆம் தேதி தாக்குதல் நடந்த சமயத்தில், தாங்கள் வேலைக்குச் சென்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.

பார்வதம்மா அய்யவாரிப்பள்ளேவைச் சேர்ந்தவர். இந்தக் கிராமம் ராப்தாடுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
UGC

"கொட்டலப்பள்ளி என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளர்களாகத் திராட்சைப் பழங்களைப் பறிக்கும் வேலைக்குச் சென்றிருந்தோம். காலை 10.30 முதல் 11 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், பயமாக இருந்ததால் அவர்கள் கூறியதை என்னால் முழுமையாகக் கேட்க முடியவில்லை. கோபிகாவின் கண்கள் மேலே சென்றுவிட்டதாக மட்டுமே கூறினார்கள். இப்படி ஒரு தாக்குதல் நடந்ததாக அவர்கள் கூறவில்லை" என்று பார்வதம்மா தெரிவித்தார்.

"தொழிலாளர்கள் வந்த வேனில் ஏறி மருத்துவமனைக்கு வந்தேன். நான் அங்கு சென்றபோது ஏராளமானோர் இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனது குழந்தைக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று நினைத்தேன். உள்ளே சென்று பார்த்தபோதுதான் இந்த நிலைமையைக் கண்டேன்" என்று அவர் கூறினார்.

பார்வதம்மா அய்யவாரிப்பள்ளேவைச் சேர்ந்தவர். இந்தக் கிராமம் ராப்தாடுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோபிகா ஆறாம் வகுப்புப் படித்தது முதல், அய்யவாரிப்பள்ளேவில் இருந்து ராப்தாடு ஜில்லா பரிஷத் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோபிகா ஆறாம் வகுப்புப் படித்தது முதல், அய்யவாரிப்பள்ளேவில் இருந்து ராப்தாடு ஜில்லா பரிஷத் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
UGC

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

தாக்குதல் நடந்த அன்று மாலையே மேல் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி அனந்தபூரில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அனந்தபூர் மாவட்டத்தின் என்.டி.ஆர் மருத்துவ சேவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதர் ரெட்டி பிபிசியிடம் கூறுகையில், அனந்தபூரில் இருந்து பெங்களூருவின் பழைய விமான நிலையச் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனை வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிறுமியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, மணிப்பால் மருத்துவமனையில் இரண்டு அதிகாரிகளை ஆந்திரப் பிரதேச அரசு நியமித்துள்ளது.

அவர்களில் கங்காதர் ரெட்டி மருத்துவத் துறையின் சார்பிலும், ராப்தாடு மண்டலக் கல்வி அலுவலர் குல்லயப்பா கல்வித் துறையின் சார்பிலும் நியமிக்கப்பட்டனர்.

"அன்று மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் அழைத்து, அரசு உத்தரவின்படி மேல் சிகிச்சைக்காகக் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சர் சத்யகுமார் இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்" என்று கங்காதர் ரெட்டி கூறினார்.

சம்பவம் நடந்த அன்று, அனந்தபூர் காவல்துறையினர் பாதுகாப்பு வாகனங்களுடன் ஆந்திரப் பிரதேச எல்லை வரை சென்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தனர்.

ஆந்திரப் பிரதேச அரசின் கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசும் நடவடிக்கை எடுத்தது. கர்நாடக எல்லையில் இருந்து பெங்களூரு மருத்துவமனை வரையிலும் போக்குவரத்துக்கு இடையூறுகள் இல்லாமல் அந்த வாகனம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாகக் குறுகிய நேரத்திலேயே மருத்துவமனையைச் சென்றடைய முடிந்ததாகக் கங்காதர் ரெட்டி தெரிவித்தார்.

அப்பெண்ணின் தாய் .
LOKESH/FB
ஆந்திரப் பிரதேச அரசு தங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்து வருவதாக அப்பெண்ணின் தாய் தெரிவித்தார்.

"அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு வாக்குறுதி அளித்தார்கள்"

தற்போது குழந்தையால் பார்க்க முடிவதாகவும், சிறிதளவு பேசுவதாகவும் பார்வதம்மா கூறினார். சிறுமி அனந்தபூரில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதிலிருந்து அவரும் அங்கேயே தங்கியுள்ளார்.

"இன்னும் அவளால் எழுந்து உட்கார முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை. கொஞ்சம் மட்டுமே உணவு சாப்பிடுகிறாள்" என்று அவர் கூறினார்.

பெங்களூரு மருத்துவமனைக்கு வந்தபோது அமைச்சர் லோகேஷ் தங்களுக்கு அளித்த உறுதிமொழி குறித்துப் பார்வதம்மா விளக்கினார்.

"லோகேஷ் சார் குழந்தையின் கையைப் பிடித்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். அதற்கேற்ப சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை தற்போது ஓரளவுக்கு மேம்பட்டுள்ளதாக மருத்துவர்களும் தெரிவித்தனர்." என்று பார்வதம்மா தெரிவித்தார்.

 மருத்துவமனை
BBC
சிறுமி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை

"அந்த தைரியம் தான் உயிரோடு வைத்திருக்கிறது"

கோபிகா நன்றாகப் படித்து பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகப் பார்வதம்மா தெரிவித்தார்.

கோபிகா மிகவும் அமைதியானவர் என்றும், அவர் மிகவும் நல்ல குழந்தை என்று பள்ளி ஆசிரியர்கள் கூட கூறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

"கோபிகா விரைவாகக் குணமடைந்து, வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று, பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்த தைரியம்தான் அவள் விரைவாகக் குணமடைய உதவுகிறது" என்று பார்வதம்மா கூறினார்.

அமைச்சர் சத்யகுமார்
SATYAKUMAR/FB
அமைச்சர் சத்யகுமார் சிறுமியின் பெற்றோருடன்

"ஹேமந்த், கோபிகாவின் அண்ணன்"

கோபிகாவைத் தாக்கியவர் ஹேமந்த் என்ற நபர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

"தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்த், ஆத்மகூர் வனப்பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு காவலர் குழுக்கள் அங்கு சென்றன. காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வர்லு மீது அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியபோது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று அனந்தபூர் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் நவம்பர் 1ஆம் தேதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பின்னர், ஹேமந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நோய்த்தொற்று காரணமாக அவரது வலது காலை அகற்ற வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹேமந்தின் தாயார் நாகலூரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு தங்களுக்கு சில தொடர்புகள் இருப்பதாகவும் பார்வதம்மா விளக்கினார்.

"ஹேமந்த் ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை. குடும்ப உறவுகளை மதிக்காமல், கட்டுப்பாடற்று நடந்துகொள்வது மிகவும் தவறானது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் தங்களது வீட்டுக்கு ஒருபோதும் வந்ததில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஹேமந்தைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றபோது, அவரது உறவினர்களையோ வழக்கறிஞரையோ தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, மங்களகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி. கோபிகிருஷ்ணா ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வு, ஹேமந்தின் அகற்றப்பட்ட காலை பாதுகாப்பாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனந்தபூர் மருத்துவமனை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!