ஆந்திர மாநில பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மீனவர்களைக் கண்டறிவதற்கு வான்வழி தேடுதலுக்கு உதவி செய்யுமாறு, கடலோர காவல் படைக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி விசைப்படகு ஒன்று (IND-TN-02-MM-2584) ஒன்பது மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றது.
காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான இந்தப் படவில் சூர்யா என்பவர் ஓட்டுநராகவும் அவருடன் எட்டு மீனவர்களும் பயணித்துள்ளனர். படகில் பத்து நாட்களுக்குத் தேவையான உணவும் உயிர் காக்கும் ஆடைகள் எட்டும் உயிர் காக்கும் மிதவைகள் ஐந்தும் இருந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நிஜாம் பட்டணம் அருகே படகில் இருந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அக்டோபர் 31ஆம் தேதி புயல் காரணமாக மீன்வளத் துறை வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, படகை அருகிலுள்ள துறைமுகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்று நிறுத்துமாறு படகின் உரிமையாளர் செல்வழகன் அறிவுறுத்தியதாக, சென்னை (வடக்கு) மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜான்பெக்கர், மீன்வளத்துறைக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்தப் படகு நிஜாம் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கிப் படகை அதன் ஓட்டுநர் சூர்யா ஒட்டிச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது, விசைப் படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அதே பகுதியில் இருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு படகுக்கு கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக, மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தத் தகவலை பழுதடைந்த படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால், 'அதன் பிறகு அந்தப் படகில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை' என கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் பிறகு படகின் உரிமையாளர் செல்வழகனின் ஏற்பாட்டில் இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட விசைப் படகுகள் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளதாக, சென்னை (வடக்கு) மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீன்வளத் துறை கூறியது என்ன?
'தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகும் காணாமல் போன படகையோ அதில் இருந்த பணியாளர்களையோ குறிப்பிட்ட இடத்தில் கண்டறிய முடியவில்லை' எனவும் மீன்வளத் துறை கூறியுள்ளது. காணாமல் போன படகிலுள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் படகைக் கண்டறியவும் மீனவர்களை மீட்கவும் வான்வழித் தேடலுக்கு (aerial search) ஏற்பாடு செய்யுமாறு கடலோரக் காவல் படைக்கு மீன்வளத் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஆந்திர கடலோர காவல்படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இயக்குநர் விஜயகார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மீனவர்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக, கடலோர காவல்படை உள்பட இதர அமைப்புளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என அவர் விளக்கம் அளித்தார்.
"மீனவர்களிடம் இருந்து கடைசிகட்ட தகவல் கிடைத்து 48 மணிநேரத்திற்கு மேல் கடந்துவிட்டது. ஆனால், அவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார், தமிழ்நாடு மீன்பிடித் தொழிற் சங்கத்தின் மாநிலத் தலைவர் லோகநாதன்.
"மீன்வளத்துறை அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் அவர்களின் குடும்பத்தினர் காத்துக் கிடக்கின்றனர். விரைவில் உரிய பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை' - படகு உரிமையாளர்
ஆந்திர கடற்பகுதியில் காணாமல் போன படகின் உரிமையாளரான செல்வழகனிடம் பிபிசி தமிழ் பேசியது. "கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலமாகத் தேடுதல் பணி நடந்து வருகிறது. தற்போது நிஜாம் பட்டணத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில், நான்கு படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர்" என்றார் அவர். தனது படகு இருந்த இடத்திற்குச் சென்று மீட்புக் குழுவினர் தேடியதாகவும் ஆனால் எதுவும் தென்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
"காணாமல் போவதற்கு முன்னதாக படகின் ஓட்டுநர் சூர்யா பேசினாரா?" என பிபிசி தமிழ் கேட்டது.
"நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணியளவில் படகில் இருந்த குப்பன் என்பவரிடம் பேசினேன். வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகக் கூறியபோது, 'ஓர் இடத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தியுள்ளோம்' என" குப்பன் தெரிவித்ததாகக் கூறினார்.
"இதன் பிறகு, படகை ஓட்டுவதாக இருந்தால் ராமாயப்பட்டணம் துறைமுகத்திற்குச் செல்லுமாறு கூறினேன். ஓட்டுநர் சூர்யாவிடம், 'நேற்று முதல் வானிலை எச்சரிக்கை பற்றி கூறிக் கொண்டே இருக்கிறேன். பொருட்படுத்தாமல் இருந்தால் எப்படி?' என சத்தம் போட்டேன். அதற்கு, 'நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்' எனப் பதில் அளித்தார்" எனக் கூறினார்.
தனது படகு நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் மேலும் ஒரு விசைப்படகு இருந்ததாகக் கூறிய செல்வழகன், "நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மற்றொரு படகுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு