காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) முக்கிய தலைவரான சௌரவ் தாஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் செல்லவிடாமல் தான் தடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவு டெல்லி விமான நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை சௌரவ் தாஸ் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், "நான் தற்போது டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருக்கிறேன். டெல்லியிலிருந்து லண்டனுக்கு நான் செல்ல வேண்டிய விமானம் அதிகாலை 1 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் செல்லவிருந்தேன். அங்குள்ள மாணவர் சங்கம் உரையாற்றுவதற்காக என்னை அழைத்திருந்தது. ஒரு குழு விவாதத்திலும் நான் பங்கேற்க வேண்டியிருந்தது" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் நவோமி கேண்டன் கூறுகையில், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சௌரவ் தாஸ் அழைக்கப்படவில்லை. ஆக்ஸ்போர்டு யூனியனில் பேசுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆக்ஸ்போர்டு யூனியன் என்பது தனித்துச் செயல்படும், சுயமாக நிர்வகிக்கப்படும் விவாத அமைப்பாகும். அது பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டு குறித்து அரசு தரப்பிலிருந்தோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ அமைப்பிடமிருந்தோ இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இருப்பினும், ஒருவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு அதிகாரங்கள் அரசிடம் உள்ளன.
சௌரவ் தாஸின் குற்றச்சாட்டு என்ன?
"குடியேற்றச் சோதனைக்காக சென்றபோது தான் எனது கடவுச்சீட்டு கண்காணிப்புக்காக குறியிடப்பட்டிருப்பது தெரியவந்தது" என்று சௌரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், "எனது கடவுச்சீட்டு மீது தடை விதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற நான் தடுக்கப்பட்டேன். படித்த இளைஞர் ஒருவர், படித்தவர்களுடன் இணைந்து அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபடுவதைக் கண்டு அரசாங்கம் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது?" என்றார்.
சௌரவ் தாஸ் மேலும் கூறுகையில், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, 'இந்த இயக்கத்தில் நாங்களும் இணைய விரும்புகிறோம். எங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம். நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்' என்று தெரிவித்தனர். ஆனால், இந்த அரசாங்கத்துக்குக் கல்வியில் எந்த ஆர்வமும் இல்லை" என்றார்.
"பள்ளிகளின் நிலைமையை நீங்களே பார்க்கலாம். இந்த அரசாங்கம் எங்களது இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் எங்களை ஒடுக்கிவிட முடியாது. இளைஞர்களான எங்களிடம் நிறைய நேரம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் மீண்டும் மீண்டும் லண்டனுக்குச் செல்வோம், பாரிஸ் நகருக்கும் செல்வோம். நிறைய விஷயங்களைச் செய்வதற்கு எங்களிடம் நேரம் இருக்கிறது"என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் எந்த அடிப்படையில் ஒருவரை தடுக்க முடியும்?
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றல்ல. கடவுச்சீட்டை முடக்குவதன் மூலம் வெளிநாடு செல்வதற்கான உரிமையைக் கட்டுப்படுத்த கடவுச்சீட்டுச் சட்டத்தின் 10(3)(c) பிரிவு அனுமதிக்கிறது.
கடவுச்சீட்டுச் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி, எந்தவொரு நபரின் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணத்தையும் பறிமுதல் செய்து திரும்ப ஒப்படைக்கும் அதிகாரம் கடவுச்சீட்டு ஆணையத்துக்கு உள்ளது.
அச்சட்டத்தின் 10(1) பிரிவின்கீழ் அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கடவுச்சீட்டு வைத்திருப்பவர் தனது கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களை ஒப்படைக்குமாறு அந்த ஆணையம் உத்தரவிடலாம்.
இந்தியாவின் கடவுச்சீட்டுச் சட்டத்தின்படி, ஒருவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பயணம் செய்வதற்குச் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா மற்றும் பிற அத்தியாவசிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஒருவர் வேறொரு நாட்டில் எத்தனை நாட்கள் தங்கத் திட்டமிட்டுள்ளார் என்பதும், அந்தப் பயணத்துக்குத் தேவையான முறையான அனுமதியைப் பெற்றுள்ளாரா என்பதும் வெளிநாட்டுப் பயணத்தைத் தடுப்பதற்கான காரணங்களாக அமையலாம்.
தவறான தகவல்களை வழங்குவதும் ஒருவரின் கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்வதற்கோ அல்லது அவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்கோ வழிவகுக்கும். நீதிமன்ற உத்தரவின்படியும் ஒருவரின் கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்யலாம் அல்லது அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கலாம்.
அரசாங்கங்கள் அல்லது அரசு அமைப்புகள் ஒருவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு காரணங்களும் உள்ளன.
ஒரு கடவுச்சீட்டு கண்காணிப்புக்காகக் குறியிடப்படுகிறது என்றால், பொதுவாகக் குடியேற்ற அல்லது பாதுகாப்பு அமைப்புகளின் தரவுத்தளத்தில் அந்தக் கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சிறப்பு எச்சரிக்கை அல்லது குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள்.
ஒருவரின் கடவுச்சீட்டு இவ்வாறு குறியிடப்பட்டிருந்தால், குடியேற்றச் சோதனையின் போது கடவுச்சீட்டை ஸ்கேன் செய்யும்போது அந்த எச்சரிக்கை தெரியவரும். இதன் பொருள், சம்பந்தப்பட்ட நபரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.
தனது கடவுச்சீட்டு கண்காணிப்புக்காகக் குறியிடப்பட்டுள்ளதாக சௌரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ள போதிலும், அதற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரியவில்லை.
அபிஜீத் தீப்கே கூறியது என்ன?
சௌரவ் தாஸின் சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்துள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங், தனது விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்னா சிங் கூறுகையில், "சௌரவும் நானும் ஆக்ஸ்போர்டு யூனியனால் அழைக்கப்பட்டிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எனது விசா நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், நேரடியாகத் தலையிடப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது"என்றார்.
"ஆனால், தற்போது நடந்துள்ள விஷயம் முற்றிலும் நம்பமுடியாததாக இருக்கிறது. உண்மையைப் பேசுவதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதற்கும் துணிச்சல் கொண்டுள்ளனர் என்பதற்காகவே இந்த நாட்டு இளைஞர்கள் குறிவைக்கப்படுவது வெட்கக்கேடானது.
"இன்று சௌரவ் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத விதம், இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் நிலை குறித்தும், இளைஞர்களின் குரலுக்கு அளிக்கப்படும் இடம் குறித்தும் மிகத் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இந்த விவகாரம் குறித்து கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
"ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநாட்டில் பேசுவதற்காகச் சௌரவ் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர் ஒருவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார். அதேவேளையில், ஆக்ஸ்போர்டில் இருந்து தனக்குக் கிடைத்த அழைப்பைக் கண்டு அவர் பொறாமைப்படுவதாகத் தெரிகிறது" என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் , "சௌரவ் ஒரு வங்கியைக் கொள்ளையடித்திருந்தாலோ அல்லது ஏதேனும் நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவரை லண்டன் செல்ல இந்த அரசாங்கம் நிச்சயம் அனுமதித்திருக்கும் போலத் தெரிகிறது" என்றார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ், மோதி அரசு அச்சத்தில் இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சி.ஜே.பி. விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்னவாக இருந்து வருகிறது?
காக்ரோச் ஜனதா கட்சி, இந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது.
இடதுசாரிக் கட்சிகளுடன் தொடர்புடைய பிற மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டத்தை பங்கேற்றன.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிஜேபி கட்சி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இதையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்வித் துறையின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தையும் அந்த அமைப்பு முன்னெடுத்தது.
இந்தக் காலகட்டத்தில், சிஜேபி உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றனர். இந்தப் பயணங்கள் பல மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின. பாஜக ஆளும் ராஜஸ்தானில் தங்கள் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் சிஜேபி குற்றம் சாட்டியது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக சிஜேபி எச்சரித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அக்கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது.
அக்டோபர் 10ஆம் தேதி போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அந்த அமைப்பின் பல தலைவர்கள் டெல்லி காவல்துறையினரால் விமானத்துக்குள்ளேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு