Skip to main content

Advertisement

அமெரிக்க இடைக்கால தேர்தல்: குடியரசுக் கட்சியின் கோட்டைகளுக்குள் தடம் பதித்த ஜனநாயகக் கட்சி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்
BBC

இது ஏற்கனவே ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக உருவெடுத்து வருகிறது. அந்தக் கட்சி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதுடன், செனட்டின் கட்டுப்பாட்டையும் தங்கள்வசப்படுத்தும் பாதையில் முன்னேறி வருகிறது.

செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனது முதல் அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தது. முன்னாள் செனட்டர் லிண்ட்ஸி கிரஹாமின் மரணத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த டார்லின் கிரஹாமை அன்னி ஆண்ட்ரூஸ் தோற்கடித்தார்.

சில மாதங்களுக்கு முன்புவரை கூட, அந்தத் தொகுதி கடுமையான போட்டி நிலைக்கு வரும் என்று மிகச் சில அரசியல் ஆய்வாளர்களே கருதினர்.

ஒரு வருடத்திற்கு முன்பு கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளாகக் கருதப்பட்ட இரண்டு செனட் தேர்தல்கள், ஜனநாயகக் கட்சிக்கு மிக எளிதான வெற்றிகளாக மாறியுள்ளன. அவை ஜார்ஜியாவில் ஜான் ஒசாஃப்பின் மறுதேர்வு வெற்றியும், வட கரோலினாவில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காலியான செனட் இடத்தையும் உள்ளடக்கியவை.

வட கரோலினா போட்டியில், முன்னாள் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ராய் கூப்பர், குடியரசுக் கட்சியின் முக்கிய நிர்வாகியான மைக்கேல் வாட்லியை தோற்கடித்தார். செனட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு ஜனநாயகக் கட்சிக்கு தேவையான நான்கு கூடுதல் இடங்களில் இதுவே முதல் வெற்றியாகும். தெற்கு கரோலினாவையும் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் இலக்கின் பாதி தூரத்தை எட்டியுள்ளனர்.

இப்போது கவனம், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள டெக்சாஸ், கான்சாஸ் மற்றும் ஓஹையோ மாநிலங்களின் செனட் இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் மீது திரும்பியுள்ளது.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், டெக்சாஸ் மற்றும் கான்சாஸ் மாநிலங்களின் செனட் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான நிலை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை தற்போதைய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் கிரெக் ஆபட் மிக வலுவான வெற்றியாளராகக் கருதப்பட்ட டெக்சாஸ் ஆளுநர் தேர்தல், தற்போது வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று கணிக்க முடியாத நெருக்கடியான போட்டியாகக் கருதப்படுகிறது.

டிரம்ப்
Getty Images

இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

முக்கியமான தேர்தல் போட்டிகளைப் பார்க்கும்போது, இதற்கான காரணங்கள் பல தென்படுகின்றன.

ஃப்ளோரிடாவில், மாநில சட்டமன்றத்தில் இருந்த குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்து, அவற்றை வெல்வதைத் தங்களுக்கு மிகவும் எளிதாக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் அந்த மூன்று தொகுதிகளையும் இழந்துவிட்டனர்.

மாநிலத்தின் பிற பிரதிநிதிகள் சபைத் தேர்தல்களிலும், குடியரசுக் கட்சியினர் சுலபமாக வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்கள் கடுமையான போட்டிகளாக மாறியுள்ளன.

உதாரணமாக, மேற்கு வட கரோலினா மற்றும் கென்டக்கியில் காலியாக இருந்த தொகுதிகளை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், விர்ஜினியா மற்றும் இந்தியானா மாநிலங்களிலும் கூடுதல் வெற்றிகளைப் பெறுவதற்கான சாதகமான நிலையில் உள்ளது.

குறிப்பாக தெற்கு மாநிலங்களில் கறுப்பின வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சியை ஆதரித்த ஃப்ளோரிடாவின் ஹிஸ்பானிக் வாக்காளர்களை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பியிருப்பதும், ஜனநாயகக் கட்சியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

ஜனநாயக கட்சியினர்
Reuters
ஜனநாயக கட்சியினர்

தெற்கு கரோலினாவில் கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில், ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளரான ஆண்ட்ரூஸ், 2024 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் பெற்ற வாக்கு ஆதரவை விட குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டார்.

அதேபோல், அந்த ஆண்டில் டிரம்ப் வெற்றி பெற்ற மியாமி-டேட் மாவட்டத்திலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளனர்.

பழமைவாதிகளுக்கு ஆறுதலாகக் கருதக்கூடிய விஷயம் ஒன்று இருந்தால், அது ஃப்ளோரிடா மாநிலம் முழுமையாகப் பார்த்தால் இன்னும் வலதுசாரி அரசியல் நோக்கத்தையே கொண்டிருப்பதாகத் தோன்றுவதுதான்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ஆஷ்லி மூடி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், ஆளுநர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் பய்ரன் டொனால்ட்ஸும் வெற்றி பெற்றார். ஆனால், "சன்ஷைன் ஸ்டேட்" என்று அழைக்கப்படும் ஃப்ளோரிடா, குடியரசுக் கட்சிக்கான சில பிரகாசமான வெற்றிகளில் ஒன்றாக மட்டுமே இருக்கக்கூடும்.

வாக்காளர்களின் மனநிலை, அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் திரும்பியிருப்பதாகத் தோன்றினாலும், அமெரிக்கா தனித்துவமான புவியியல் மற்றும் மக்கள்தொகை அம்சங்களைக் கொண்ட மிகப் பெரிய நாடாகும்.

கிழக்கு மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான ஒரு இரவு அமைந்தது என்பதாலேயே, நாடு முழுவதும் அதேபோன்ற வெற்றி கிடைக்கும் என்று அவசியமில்லை. ஆனால், அமெரிக்காவின் மத்தியப் பகுதிகளில் இருந்து வெளியாகும் ஆரம்ப முடிவுகள், கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் காணப்படும் போக்கையே பின்பற்றுவதாகத் தெரிகின்றன.

ஜனநாயகக் கட்சிக்கான ஒரு பெரிய அரசியல் அலை உருவாகியுள்ளது. இப்போது அந்த அலை குடியரசுக் கட்சியின் ஆதிக்கப் பகுதிகளுக்குள் எவ்வளவு தூரம் ஊடுருவிச் செல்லும் என்பதே கேள்வியாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!