திருமண சீசன் என்பதால், பல குடும்பங்கள் தங்கம் வாங்கி வருகின்றன. தங்க நகைகளை வாங்கும்போது, அவற்றின் தூய்மையை உறுதிப்படுத்த பெரும்பாலானோர் நகைகளில் பதிக்கப்பட்டுள்ள ஹால்மார்க் முத்திரையையே நம்புகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஊடகங்களில் வெளியான இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் வரைவு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஹால்மார்க்கிங் நடைமுறையைக் கண்காணிப்பதில் குறைபாடுகள் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கையின்படி, 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS), பதிவு செய்யப்பட்ட நகை விற்பனையாளர்களில் 83%-க்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ள வேண்டிய வருடாந்திர ஆய்வுகளை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதற்காக சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் தூய்மைக் குறைவானவை என்று அர்த்தமல்ல.
ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட பிறகு, அதற்கான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்படுகிறது என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வி.
மேலும், தங்க நகைகளில் 'ரீனியம்' (Rhenium) போன்ற கனரக உலோகங்கள் கலக்கப்படுவதாகவும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால், ரீனியம் என்றால் என்ன? தங்கத்தில் இந்த உலோகம் கலக்கப்படுவதாகக் கூறப்படுவதன் பின்னணி என்ன? இந்த விவகாரம் குறித்து நிபுணர்களின் கருத்து என்ன?
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை 15%-க்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. அதே நேரத்தில், திருமணக் காலம் நெருங்குவதால் தங்க நகைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில், நகை வாங்கும்போது அதன் உண்மையான தூய்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது நுகர்வோருக்கு முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. தங்கத்தின் தரத்தை உறுதிசெய்ய ஹால்மார்க் முத்திரை எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது? தங்க நகை வாங்கும்போது என்னென்ன அம்சங்களைச் சரிபார்க்க வேண்டும்?
இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) நுகர்வோருக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் என்ன?
சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம், தங்க நகைகளை வாங்கும்போது அவற்றின் வெளிப்புறப் பளபளப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உண்மையான தூய்மையையும் உறுதிப்படுத்துமாறு இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், போலியான ஹால்மார்க் முத்திரைகளை அடையாளம் காணவும், நகைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள HUID (ஹால்மார்க் தனித்துவ அடையாளம்) எண்ணை 'BIS Care' செயலி மூலம் சரிபார்க்குமாறு பரிந்துரைத்துள்ளது.
தங்க நகைகளை வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும், HUID எண்ணைச் சரிபார்க்க வேண்டும், BIS ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் BIS வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த சமூக ஊடகப் பதிவு பொதுவான நுகர்வோர் விழிப்புணர்வு அறிவுரையை மட்டுமே வழங்குகிறது. இதில் இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்ட வரைவு அறிக்கை குறித்தோ அல்லது ரீனியம் என்ற உலோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஹால்மார்க் முத்திரை என்றால் என்ன? தங்க நகைகளின் உண்மையான தூய்மையைச் சரிபார்ப்பது எப்படி?
ஹால்மார்க்கிங் என்பது தங்க நகையில் உள்ள தங்கத்தின் தூய்மையைப் பரிசோதித்து, அதன் தரத்தை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் நடைமுறை. இதற்காக, நகை விற்பனையாளர் இந்திய தர நிர்ணய அமைப்பான BIS-இல் பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர், அந்த நகை பி.ஐ.எஸ் அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு அனுப்பப்படும். அங்கு நகையின் தங்கத் தூய்மை பரிசோதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை நகை பூர்த்தி செய்தால், அதில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படும்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 1 முதல், ஹால்மார்க் முத்திரையில் மூன்று முக்கிய அடையாளங்கள் இடம்பெறுகின்றன:
- BIS அமைப்பின் அதிகாரபூர்வச் சின்னம்.
- தங்கத்தின் காரட் அளவு மற்றும் தூய்மையைக் குறிக்கும் எண் (உதாரணமாக, 22K 916).
- ஆறு எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்ட தனித்துவமான HUID (ஹால்மார்க் தனித்துவ அடையாளம்) குறியீடு.
ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்தனி HUID குறியீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையின் ஹால்மார்க் விவரங்களைச் சரிபார்க்க முடியும். உதாரணமாக, 22 காரட் தங்க நகை என்பது அதில் சுமார் 91.6% தூய தங்கம் இருப்பதைக் குறிக்கிறது.
ரீனியம் குறித்த விவாதம் ஏன்?
கடந்த வாரம், தைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட புலனாய்வில், ரீனியம் உலோகத் தூள் கலக்கப்பட்ட தங்க நகைகள், தூய்மைப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட சோதனையின் முடிவை மட்டும் வைத்து சந்தையில் பரவலாகத் தங்கக் கலப்படம் நடைபெறுவதாக முடிவுக்கு வர முடியாது என்றும் ஊடக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ரீனியம் கலந்த தங்கம் குறித்த கவலை இந்தியாவுக்கு மட்டுமே உரியதல்ல. சீனாவிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி, ஏப்ரல் 26ஆம் தேதி இதுகுறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.
உண்மையில், ரீனியம் விவகாரம் வெளிவருவதற்கு முன்பே தங்கத்தில் பிற உலோகங்களைக் கலந்து கலப்படம் செய்வது குறித்த கவலைகள் இருந்து வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ருத்தேனியம், இரிடியம் போன்ற உலோகங்களின் கலப்பைக் கண்டறியும் வகையில், 2005ஆம் ஆண்டிலேயே இந்திய தர நிர்ணய அமைப்பு தனது தரநிலைகளில் மாற்றங்களைச் செய்ததாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருந்தது.
ரீனியம் என்றால் என்ன?
ரீனியம் என்பது வெள்ளியைப் போன்ற பளபளப்பான தோற்றம் கொண்ட, அதிக அடர்த்தியுடைய ஓர் உலோகம். இதன் உருகுநிலை 3,186 டிகிரி செல்ஷியஸ். ஒரே அளவுள்ள துண்டுகளை ஒப்பிடும்போது, தூய தங்கத்தைவிட ரீனியம் அதிக எடை கொண்டதாக இருக்கும்.
இந்த உலோகம் முக்கியமாக ஜெட் விமானங்களின் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் பிளேடுகளை தயாரிக்க உதவும் உயர் வெப்பத்தைத் தாங்கும் கலப்புலோகங்களில் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட தொழில்துறை செயல்பாடுகளிலும் இதன் பயன்பாடு உள்ளது.
தங்கத்தில் கலப்படம் செய்ய ரீனியம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதற்கு, அதன் விலையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது, தங்கத்துடன் ஒப்பிடும்போது ரீனியத்தின் விலை மிகவும் குறைவு.
ஓர் இயந்திரத்தால் எவ்வாறு தவறான முடிவை வழங்க முடியும்?
தங்க நகைகள் பொதுவாக எடையின் அடிப்படையில், அதாவது கிராம் கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், தங்கத்துடன் குறைந்த விலையுள்ள, அதிக அடர்த்தி கொண்ட உலோகத்தைக் கலந்தால், நகையின் மொத்த எடை பெரிதாக மாறாது. ஆனால், அதில் உண்மையான தங்கத்தின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் தங்கத்தின் அளவைக் குறைத்து விற்பனையாளர்கள் லாபமடைய வாய்ப்புள்ளது.
அகில இந்திய நகை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பின் (AIJGF) தேசிய தலைவர் பங்கஜ் அரோரா, இதுபோன்ற உலோகக் கலப்படச் சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, "கடந்த காலங்களில், இத்தகைய உலோகக் கலப்புகளை XRF இயந்திரப் பரிசோதனை மூலம் கண்டறிய முடிந்தது. எனவே, அது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை."
XRF பரிசோதனை என்றால் என்ன?
XRF என்பது 'எக்ஸ்-ரே புளோரசன்ஸ்'என்பதன் சுருக்கம். இந்தத் தொழில்நுட்பத்தில் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி, நகையின் மேற்பரப்பில் உள்ள உலோகங்களின் வகைகளையும் அவற்றின் விகிதங்களையும் கண்டறிய முடியும். ஆனால், ரீனியம் விவகாரத்தில் நிலைமை மாறுபடுவதாக பங்கஜ் அரோரா கூறுகிறார்.
தங்கம் சுமார் 1,064 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உருகக்கூடியது. ஆனால், ரீனியம் உருகுவதற்கு 3,000 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது. இதனால், ரீனியம் தங்கத்துடன் சீராகக் கலக்காமல், நகையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செறிந்து காணப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "XRF இயந்திரம் ஒரு முழு நகையையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில்லை. பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆய்வு செய்கிறது. ஹால்மார்க்கிங் மையங்களிலும் நகையின் சில குறிப்பிட்ட பகுதிகளில்தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பரிசோதனை செய்யப்படும் பகுதியில் உலோகத் துகள்கள் இல்லையென்றால், நகை தரப் பரிசோதனையில் தேர்ச்சி பெறக்கூடும். அதாவது, இயந்திரம் சரியாகச் செயல்பட்டாலும், பரிசோதனை செய்யப்படும் பகுதியில் கலப்பட உலோகம் இல்லாததால் அதைக் கண்டறிய முடியாமல் போகலாம்" என்றார்.
ஊடக செய்திகளின்படி, XRF பரிசோதனைக்கு சில தொழில்நுட்ப வரம்புகள் உள்ளன. பரிசோதனையின் முடிவுகள், பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் வகை, அதன் அமைப்புகள் மற்றும் சோதனை மேற்கொள்ளப்படும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். மேலும், நுகர்வோரின் பழைய தங்க நகைகளைப் பரிசோதிப்பது தொடர்பாக BIS 2022ஆம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, XRF பகுப்பாய்வு என்பது நகையின் மேற்பரப்பில் உள்ள தங்கத்தின் அளவைக் கண்டறியும் முறையாகும்.
இருப்பினும், இதுபோன்ற உலோகக் கலப்படங்களை ஹால்மார்க்கிங் மற்றும் XRF பரிசோதனைகள் மூலம் கண்டறியவே முடியாது என்று கூறுவதை சில நிபுணர்கள் ஏற்கவில்லை. அனைத்து தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யோகேஷ் சிங்லா, ஹால்மார்க்கிங் நடைமுறை மற்றும் XRF பரிசோதனை மூலம் இத்தகைய கலப்படங்களைக் கண்டறிய முடியும் என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரிடியம் மற்றும் ருத்தேனியம் போன்ற உலோகங்களைக் கொண்டு தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவது குறித்த கவலைகள் பல தசாப்தங்களாகவே இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஆபரணத்திற்கு ஆபத்து உள்ளதா?
இதுபோன்ற தங்கக் கலப்படம் சந்தையில் பரவலாக நடைபெறுவதாகக் கூறுவதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. இதற்கிடையில், அகில இந்திய ரத்தின மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் (GJC) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், இந்த விவகாரத்தை இந்திய தர நிர்ணய அமைப்பு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து GJC தலைவர் ராஜேஷ் ரோக்டே கூறுகையில், தங்க நகைகளில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் GJC அல்லது நேரடியாக BIS அமைப்பிடம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நுகர்வோர் நம்பகமான நகைக் கடைகளில் மட்டுமே தங்க நகைகளை வாங்க வேண்டும் என்றும், 'BIS Care' செயலி மூலம் நகைகளில் உள்ள ஹால்மார்க் மற்றும் HUID குறியீட்டின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காகத் தங்க நகைகளை வாங்கும்போது, அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் நம்பாமல், ஹால்மார்க் முத்திரை மற்றும் அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகே வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
வாங்கும் முன் தங்கத்தின் தரத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?
BIS Care செயலி மூலம் HUID குறியீட்டைச் சரிபார்க்கவும்
BIS வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்-இல் இருந்து 'BIS Care' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், செயலியில் உள்ள 'Verify HUID' என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து, நகையில் பொறிக்கப்பட்டுள்ள ஆறு எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்ட HUID குறியீட்டை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு, செயலியில் காட்டப்படும் விவரங்களை உங்களிடம் உள்ள நகையுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். இதில் நகைக்கடையின் பதிவு எண், நகையைப் பரிசோதித்த ஹால்மார்க்கிங் மையத்தின் விவரங்கள், நகையின் வகை மற்றும் தங்கத்தின் தூய்மை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
மேலும், நகையின் மொத்த எடை, ஹால்மார்க் முத்திரையின் படம், நகையின் வடிவம் ஆகியவற்றையும் சரிபார்க்குமாறு BIS அறிவுறுத்துகிறது. செயலியில் உள்ள தகவல்களுக்கும் நகையில் உள்ள விவரங்களுக்கும் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதே செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
முறையான ரசீதைப் பெறுவது அவசியம்
தங்க நகைகளை வாங்கும்போது, GST விதிகளுக்கு உட்பட்ட முறையான ரசீதைத் தவறாமல் பெற வேண்டும். அந்த ரசீதில் தங்கத்தின் காரட் அளவு, எடை, HUID குறியீடு ஆகிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். GST இல்லாத முறைசாரா ரசீதைப் பெறுவது, எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நகை வாங்கியதற்கான முக்கியமான ஆதாரத்தை இழக்க நேரிடலாம்.
நம்பகமான நகைக் கடைகளில் வாங்குங்கள்
நீண்டகாலமாகத் தொடர்பில் இருக்கும் அல்லது குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமான நம்பகமான நகைக்கடைகளில் நகைகளை வாங்குவது நல்லது என்று பங்கஜ் அரோரா அறிவுறுத்துகிறார்.
ரசீது தொலைந்து போவது அல்லது நகையின் தரம் தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுவது போன்ற சூழல்களில், நம்பகமான விற்பனையாளர்களிடம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வது எளிதாக இருக்கும்.
சந்தேகம் ஏற்பட்டால் மறுபரிசோதனை செய்யலாம்
நீங்கள் வாங்கிய தங்க நகையின் தூய்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டால், BIS அங்கீகாரம் பெற்ற ஹால்மார்க்கிங் மையத்தில் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதற்குச் சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். பரிசோதனை முடிந்ததும், நகையின் தரம் குறித்த எழுத்துபூர்வமான அறிக்கையும் வழங்கப்படும்.
நுகர்வோருக்கான உரிமைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
BIS விதிமுறைகளின்படி, ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட தங்க நகையின் உண்மையான தூய்மை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரத்தைவிடக் குறைவாக இருந்தால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு நகை விற்பனையாளருக்கு உள்ளது.
இந்த இழப்பீடு, தூய்மைக் குறைபாட்டால் ஏற்பட்ட மதிப்பு இழப்பைப் போன்று இருமடங்காக இருக்க வேண்டும். அத்துடன், நகையைப் பரிசோதிப்பதற்கான கட்டணத்தையும் விற்பனையாளரே ஏற்க வேண்டும்.
கலப்படம் செய்யப்பட்ட தங்கம் எங்கிருந்து வருகிறது?
வங்கிகள் மூலம் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை என்று பங்கஜ் அரோரா தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 11 முதல் 12 முகமைகள் வங்கிகள் வாயிலாகத் தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. ஒவ்வொரு தங்கச் சரக்குக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுவதால், அதை ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் விவரங்களைக் கண்டறிவது எளிது.
ஆனால், சட்டவிரோதமாகக் கடத்தி நாட்டிற்குள் கொண்டு வரப்படும் தங்கத்தில்தான் பிரச்னைகள் அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட பிறகுதான், சட்டவிரோதமாகத் தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இவ்வாறு கொண்டு வரப்படும் தங்கத்திற்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலும் இல்லை. அதன் தூய்மைக்கும் யாரும் உத்தரவாதம் அளிப்பதில்லை" என்றார்.
இவை பங்கஜ் அரோராவின் தனிப்பட்ட கருத்துகள்; இந்தக் கூற்றுகளை பிபிசி சுயமாகச் சரிபார்க்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தமாகத் தங்கம் கொள்முதல் செய்யும்போது, நகை வியாபாரிகள் ஒரு கிராம் தங்கத்தை எடுத்து, அதைச் சுத்தியலால் தட்டி மெல்லிய தகடாக மாற்றிய பிறகு பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இவ்வாறு தங்கத்தைத் தட்டும்போது அது விரிவடைவதால், பரிசோதனைக் கருவிகளால் அதன் உலோகக் கலவையை இன்னும் துல்லியமாகக் கண்டறிய முடியும் என அவர் கூறுகிறார்.
தொழில்துறை கோரிக்கைகளும் பிஐஎஸ் கூட்டமும்
தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA), இந்திய தர நிர்ணய அமைப்பான BIS-க்கு ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளது.
அதில், முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், தங்கத்தின் தூய்மையைச் சரிபார்க்கும் பரிசோதனை நடைமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பதிவு செய்யப்படாத சுமார் 4,000 தங்கச் சுத்திகரிப்பு நிலையங்களையும் BIS-இன் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க BIS அமைப்பு நவம்பர் 23ஆம் தேதி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில், BIS விஞ்ஞானிகள் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் கருவிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பங்கஜ் அரோரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு