தனது மகள் கொலை செய்யப்பட்டதை ஃபேஸ்புக் பதிவின் மூலமாகவே டுகு என்கோசியாபான்ட்சி அறிந்துகொண்டார். அது ஆகஸ்ட் மாதம். 27 வயதான தனது மகள் ஒகுஹ்லேவை பல நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாமல் டுகு தவித்து வந்தார். இருப்பினும், அவரது மகள் அவ்வப்போது சில காலம் தொடர்பில் இல்லாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், ஒரு சனிக்கிழமை நாளில் டுகுவின் அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் அவரைத் தொடர்புகொண்டனர். ஃபேஸ்புக்கில் ஒகுஹ்லேவை காணவில்லை என்று காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதைப் பார்த்ததாகவும், காயமடைந்த நிலையில் ஒகுஹ்லே இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, அதில் இருந்த நபர் உயிரிழந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன். உற்றுப் பார்த்தபோதுதான் அது ஒகுஹ்லே என்பதைப் புரிந்துகொண்டேன்," என்கிறார் 50 வயதான டுகு.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு, தனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவரை டுகு தொலைபேசியில் தொடர்புகொண்டார். புகைப்படத்தில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு, நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் விவசாய மையமாக விளங்கும் கோக்ஸ்டாட் நகருக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் உடல் வீசப்பட்டிருப்பதை அந்தக் காவலர் உறுதிப்படுத்தினார்.
ஆனால், வார இறுதி விடுமுறை காரணமாக உடற்கூறாய்வுக் கூடம் மூடப்பட்டு இருந்ததால், திங்கள்கிழமை காலைதான் ஒகுஹ்லேவின் உடலை டுகுவால் அடையாளம் காண முடிந்தது. அப்போது, அவரது உடல் சிதைக்கப்பட்டு இருந்ததையும், முகம் கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததையும் டுகு கண்டார். "அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை," என்கிறார் டுகு.
ஒகுஹ்லேவுக்கு ஒன்பது மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் சிவில் பொறியியல் துறையில் மாணவியாகவும் இருந்தார். தென்னாப்பிரிக்க காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கொல்லப்பட்ட 581 பெண்களில் ஒகுஹ்லேவும் ஒருவர்.
ஒட்டுமொத்தமாக இந்தக் காலகட்டத்தில் 5,590 கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 204 குறைவு. கொலைச் சம்பவங்களைப் பாலின அடிப்படையில் காவல்துறை வகைப்படுத்தி வெளியிடுவது இதுவே முதல்முறை என்பதால், கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஜோகன்னஸ்பர்க் நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள எகுர்ஹுலேனி மாவட்டத்தில், 12 பெண்களின் உடல் அரை நிர்வாண நிலையில் காயங்களுடன் மக்கள் நடமாடும் பகுதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரம் குறித்து நாடு முழுவதும் மீண்டும் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன.
உலகிலேயே பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா உள்ளது.
இந்தக் கோடைக்காலக் கொலைச் சம்பவங்களுக்குப் பதிலளித்த அதிபர் சிரில் ரமபோசா, பெண்களுக்கு ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பும் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், கோக்ஸ்டாட் மற்றும் எகுர்ஹுலேனி மாவட்டத்தில் உள்ள கெம்ப்டன் பார்க் போன்ற பகுதிகளில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொது மக்களே முன்னெடுத்து வருவதை பிபிசி உலக சேவை கண்டறிந்தது.
டுகுவை பொறுத்தவரை, தனது மகளின் கொலை குறித்து அவரே விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளார். மகள் கொல்லப்பட்டுப் பல மாதங்கள் கடந்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
"ஒகுஹ்லேவை அடக்கம் செய்த பிறகு அனைத்தும் அமைதியாகிவிட்டன, எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறையினர் முன்வந்து விசாரணை நடத்த வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன்."
தனது மகள் காணாமல் போன நாளில் அவர் யாருடன் இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிகளை, நகரிலுள்ள உள்ளாட்சி அரசு கட்டடத்தில் இருந்து காவல்துறையினர் ஆய்வு செய்யத் தவறிவிட்டதாக டுகு கருதுகிறார். அந்தக் காட்சிகள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து கருத்து கேட்டு தென்னாப்பிரிக்க தேசிய காவல்துறையை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், இந்தச் செய்தி வெளியிடப்படும் நேரம் வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் கொலைச் சம்பவங்களைக் கையாள்வதில் தனது ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதை காவல்துறை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கு "கூடுதல் முயற்சிகள்" தேவை என்று தற்காலிக காவல்துறை அமைச்சர் ஃபிரோஸ் கச்சாலியா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, பெண்கள் கொலை செய்யப்படும் வழக்குகளில் தீர்வு காணப்படாத வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தென்னாப்பிரிக்க காவல்துறையினர் "போதிய பொருளாதார ஆதாரங்கள் இல்லாமலும், போதுமான உபகரணங்கள் இன்றியும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் திறம்படவும் உணர்வுபூர்வமாகவும் கையாள்வதற்குத் தேவையான பயிற்சி இல்லாமலும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
தற்போது, தனது மகளைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்களைத் தேடி விசாரிப்பதுடன், சிசிடிவி காட்சிகளையும் டுகு தேடி வருகிறார். இதன் மூலம் இந்தக் கொலை தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
அதிபர் ரமபோசா அளித்த உறுதிமொழிகள் இருந்தபோதிலும், எதுவும் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகம் இல்லை. "ரமபோசா கூறியதைக் கேட்டேன். ஏதாவதொரு சம்பவம் நடந்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. கோக்ஸ்டாடில் இருக்கும் நாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், கண்ணுக்குத் தெரியாதவர்களாக நடத்தப்படுவதாகவும் உணர்கிறோம். அரசுக்கு எங்களைப் பற்றிக் கவலையில்லை" என்கிறார் அவர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தென்னாப்பிரிக்கா இதுவரை என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என்று இந்த மாதத் தொடக்கத்தில் பிபிசி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரமபோசா, பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்காக பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தபோது பேசிய ரமபோசா, கடந்த மூன்று ஆண்டுகளில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், "மேலும் அதிகமான காவல்துறையினர் வெளிப்படையாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்வோம்" என்றும் கூறினார்.
இந்த ஆண்டில் கோக்ஸ்டாட் நகரில் கொல்லப்பட்ட ஒரே பெண் ஒகுஹ்லே மட்டுமல்ல. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, அந்த நகரில் ஐந்து பெண்கள் மற்றும் மிகவும் இளம் வயதுடைய மூன்று குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் இரண்டு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், இந்தக் கோடைக்காலத்தில் அப்பகுதி மக்கள் தெருக்களில் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கியதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இரவு நேரக் கட்டுப்பாட்டையும் அமல்படுத்தினர். ஜூன் மாதம் முதல், சூரியன் மறைவதற்குள் குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும், பெண்கள் இரவு 9 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 34 வயதான கம்வாலெத்து செட்வாயோ, உள்ளூர் குடியிருப்போர் கண்காணிப்புக் குழுவில் இருக்கிறார். இரவு நேரங்களில் நகரின் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் சுமார் 15 ஆண்களைக் கொண்ட குழுவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து தகவல் கிடைத்த பகுதிகளிலும் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கண்காணிப்புப் பணிகள் அதிகம் நடைபெறுவதாக கம்வாலெத்து தெரிவிக்கிறார். ஏனெனில், இந்த நாட்களில்தான் மக்கள் அதிக அளவில் மது அருந்துகின்றனர். கண்காணிப்புக் குழுவில் உள்ள பெரும்பாலானோர் கம்புகள், சவுக்குகள், டார்ச் விளக்குகளை எடுத்துச் செல்கின்றனர். ஆனால், கம்வாலெத்துவிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது. கூடுதல் உதவி தேவைப்படும் சூழலில் காவல்துறையினரை அழைப்போம் என்றும் அவர் கூறுகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, இந்த இரவுநேரக் கட்டுப்பாடு அவர்களின் பாதுகாப்புக்கு உதவுவதாகவும், இது தன்னார்வ அடிப்படையிலான தற்காலிக நடவடிக்கை என்றும், கொலைக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்யும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்கும் என்றும் கம்வாலெத்து தெரிவித்தார்.
"சமூகத்தினருடன் இணைந்து நாங்கள் எடுத்த முடிவின்படி, இந்த நடவடிக்கையில் அவர்களுக்கு உதவி வருகிறோம். ஆனால், யாராவது இதை ஏற்க மறுத்தால், எங்களால் எதுவும் செய்ய முடியாது."
இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவரும் இரவு நேரங்களிலோ அல்லது தெருக்களிலோ தாக்கப்படுவதில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு கெம்ப்டன் பார்க் பகுதியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கோதாட்சோ மொஜெலா கடத்தப்பட்டார். அவர் ஒரு டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கதவுகளைப் பூட்டிவிட்டுத் தவறான திசையில் வாகனத்தை ஓட்டத் தொடங்கினார். தவறான வழியில் செல்வதைச் சுட்டிக்காட்டியபோது, அந்த ஓட்டுநர் தன்னைத் தாக்கத் தொடங்கியதாகவும், அவர் குத்தியும் அறைந்தும் தாக்கினார் என்றும் கோதாட்சோ கூறுகிறார்.
"அந்தக் கணமே என் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்துவிட்டேன்" என்கிறார் தற்போது 35 வயதாகும் கோதாட்சோ. இதையடுத்து, அவர் பயணித்துக் கொண்டிருந்த டாக்சியின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து, ஓடும் வாகனத்தில் இருந்து வெளியே குதித்தார். இதில் அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், கண்களில் நரம்பு பாதிப்பும் உண்டானது. அருகில் இருந்த இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு உதவினர்.
தன்னைத் தாக்கியவர், தனக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காகப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். இதனால் தற்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோதாட்சோ அஞ்சுகிறார்.
கோதாட்சோவை தாக்கியவர் அவருக்குத் தெரியாத நபராக இருந்தாலும், தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவலின்படி, 2020-21ஆம் ஆண்டுகளில் அந்நாட்டில் கொல்லப்பட்ட பெண்களில் 60% பேர் தங்களது நெருங்கிய துணையால் கொல்லப்பட்டுள்ளனர். தன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, தனது வாழ்க்கை முறையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார் கோதாட்சோ.
அவற்றில், தாக்க வருபவர்களை அச்சுறுத்துவதற்காகப் போலியான துப்பாக்கி ஒன்றை வாங்கியதும் அடங்கும். தனியாக ஓடுவதையும் அவர் நிறுத்திவிட்டார். இதற்கு முன்பு சந்தித்திராத வாடிக்கையாளர் ஒருவரை வேலை தொடர்பாகச் சந்திக்கச் செல்லும்போது, தன்னுடன் ஒருவர் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள பல பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
செப்டம்பர் மாதம், 38 வயதான எலிசபெத் மோசெலாகோமோ என்பவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கெம்ப்டன் பார்க் பகுதியிலுள்ள பெண்கள் தனியாக நடப்பதையோ, ஓடுவதையோ தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். குறிப்பாக, "ஆட்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான பகுதிகளில்" தனியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.
செப்டம்பர் 9ஆம் தேதி, ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் காணாமல் போனார். மூன்று நாட்களுக்குப் பிறகு, கெம்ப்டன் பார்க் பகுதியில் பரபரப்பான நெடுஞ்சாலைக்கு அருகே, உடலில் பலத்த காயங்களுடனும் அரைகுறை ஆடைகளுடனும் அவரது உடல் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தென்னாப்பிரிக்காவின் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடும் சமூகத்தினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சகோதரிகளான ஸோன்கே மற்றும் ஸாமா இம்தெத்வாவும் அடங்குவர்.
இவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜோகன்னஸ்பர்க்கில் 'தி பேக்' (The Pack) என்ற பெண்களுக்கான ஓட்டக் குழுவைத் தொடங்கினர். எலிசபெத்தும் அவ்வப்போது இந்தக் குழுவின் நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.
எலிசபெத் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் நகரம் முழுவதும் உள்ள ஓட்டப் பயிற்சியாளர்கள் இணைந்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டங்களிலும் அவர்கள் பங்கேற்றனர்.
தற்போது ஸோன்கே மற்றும் ஸாமாவின் ஓட்டக் குழுவினர், தங்களது பயிற்சியின்போது கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெப்பர் ஸ்பிரே மற்றும் விசில்களை எடுத்துச் செல்கின்றனர். தங்களைப் பின்தொடர்ந்து வருவதற்கு கார்களையும் ஏற்பாடு செய்கின்றனர். மேலும், தங்களது ஓட்டக் குழுவில் உள்ள பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளையும் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
"பெண்கள் தங்களது இயல்பான தன்மையுடன் வெளிப்படவும், தாங்கள் விரும்பும் செயல்களைச் செய்யவும் பாதுகாப்பான இடங்களை உருவாக்க நாம் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் 37 வயதான ஸாமா.
தனக்கு நேர்ந்த சம்பவத்திற்குப் பிறகு, கோதாட்சோ கெம்ப்டன் பார்க்கில் இருந்து வெளியேறி, நாட்டின் மற்றொரு பகுதியில் வசிக்கும் தனது பெற்றோருக்கு அருகில் குடியேறினார்.
சமூகச் செயல்பாட்டாளரான அவரது தாயார், கொல்லப்பட்ட பெண்களை நினைவுகூரும் வகையில் அண்மையில் பிரார்த்தனைப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்தப் பேரணியில்தான் கோதாட்சோ முதல்முறையாகத் தனது அனுபவத்தைச் சமூகத்தினரிடம் பகிர்ந்துகொண்டார்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவர் கூறுகையில், "தற்போது இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அசுத்தமானவர்கள் அல்ல, மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு உடைந்துபோனவர்களும் அல்ல. நடந்ததற்கு நீங்கள் காரணமல்ல; நீங்கள் தனியாகவும் இல்லை" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு