
சரவாக் முழுவதும் அனைத்து பறக்கும் மருத்துவ சேவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன !
சம்பந்தப்பட்ட தரப்பினர், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தி, மறுஆய்வு செய்ய, அது வழிகோலும் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உரிய மருத்துவ வசதிகளுக்கு அழைத்துச் செல்ல, ஆயுதப்படையின் வளங்களைப் பயன்படுத்துவது குறித்து, அந்தத் தரப்புடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சு கூறியது.
செவ்வாய்கிழமை, அம்மாநிலத்தில், பறக்கும் மருத்துவ சேவை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஐவரும் உயிரிழந்தனர்.
----------
இதனிடையே, அந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை, ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது !
அது தொடர்பான முழுமையான அறிக்கை, விபத்து நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், மலேசியர்கள் எவ்வித யூகங்களையும் வெளியிட வேண்டாம் என CAAM கேட்டுக்கொண்டுள்ளது.
---------
இணைய மோசடிகளைத் தடுப்பது தொடர்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு நடத்திய தொடர் கலந்துரையாடல்களின் முடிவுகள், விரைவில் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் !
அந்தக் குழுவின் கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட, முக்கிய முடிவுகளை உட்படுத்திய அமைச்சரவைக் குறிப்பும், தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 டிசம்பர் முதல், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கத்தை வைத்து விநியோகம் செய்பவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
--------
சிலாங்கூர் ஷா அலாம் Taman Alam Megah-வில் நடந்த கைகலப்பில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த எழுவரில் மூவர், கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
--------
மற்றொரு பக்கம் Kuala Langat-டில், வீடொன்றின் முன், ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறார் !