Skip to main content

Advertisement

'ஒரே ஆசிரியர் பெயரில் 162 புத்தகங்கள்' - பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் புகாரில் சிக்கிய பதிப்பகம் குறித்து எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
BBC

தமிழக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர். மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குச் சொந்தமான பதிப்பக அலுவலகங்கள், இல்லம் உள்ளிட்ட ஏழு இடங்களில் நவம்பர் 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்குப் புத்தகக் கொள்முதலுக்காக மொத்தம் ரூ.1.74 கோடி வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 16ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்.) நகலை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த விசாரணையின்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நேரடியாக ஆஜராகி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அப்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏழு இடங்களில் நடந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டன?

எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
BBC

மோகனுக்குச் சொந்தமான அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது இல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் புத்தகங்கள் அச்சிடப்படும் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள அச்சகத்திலும் சோதனை நடைபெற்றது.

மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மைய நூலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனைகளின்போது புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகள், ஹார்டு டிஸ்க் மற்றும் இதர ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் புத்தகக் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஆய்வு செய்யப்பட உள்ளன. மோகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
BBC
அகல் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்

இரண்டு பதிப்பகங்களுக்கும் ரூ.1.74 கோடி பணம் வழங்கப்பட்டது எப்படி?

அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.1.74 கோடி வழங்கப்பட்டதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்ட நூலகங்களுக்கும் புத்தகங்கள் வாங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், புத்தகங்களின் தேர்வு, விலை நிர்ணயம் மற்றும் பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட தொகை ஆகியவை தொடர்பாக முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு மட்டும் அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து 1,700 தலைப்புகளில் புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.17 லட்சம் வழங்கப்பட்டதாக நவம்பர் 11-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொகை பெரியார் அறிவுலகத்துக்கான கொள்முதலுடன் தொடர்புடையது. மற்ற நூலகங்களுக்கான கொள்முதல்களையும் சேர்த்து மொத்தமாக ரூ.1.74 கோடி வழங்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியலில் இல்லாத புத்தகங்கள் எப்படி இடம்பெற்றன?

எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
Getty Images
கோப்புப்படம்

புத்தகக் கொள்முதலுக்காக 137 உறுப்பினர்களைக் கொண்ட புத்தகப் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சுமார் 26,000 புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஆனால், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத புத்தகங்களும் இறுதிக் கொள்முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகங்களைப் பரிந்துரைக்கும் குழு வழங்கிய பட்டியலுக்கும் இறுதியாக வாங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலுக்கும் இடையில் என்ன வேறுபாடுகள் இருந்தன, பரிந்துரைக்கப்படாத புத்தகங்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டன, அதற்கு யார் ஒப்புதல் அளித்தனர் என்பவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் கொள்முதல் நடைமுறையை ஒருங்கிணைத்து மேற்பார்வையிட ஒருங்கிணைப்புக் குழுவும், புத்தகங்களின் விலை மற்றும் கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பேச்சுவார்த்தைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தன.இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெறுகிறது என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

அகல் விளக்கு பதிப்பகத்தில் ஒரே ஆசிரியர் பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள்

அகல் விளக்கு பதிப்பகம் தொடர்பாக, புத்தகங்களின் பதிப்பு மற்றும் வடிவத்தை அடையாளம் காண உதவும் சர்வதேசத் தரப் புத்தக எண் (ISBN) பதிவுகளில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்துள்ளது.

அதனடிப்படையில், அந்தப் பதிப்பகத்தின் கீழ் 418 ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்களில் ஆறு பேர் தலா நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பதாகவும், அந்த ஆறு பேரின் பெயர்களில் மொத்தம் 745 புத்தகங்கள் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் மோனிகா ரவி என்ற பெயரில் 162 புத்தகங்களும், லட்சுமி மோகன் என்ற பெயரில் 124 புத்தகங்களும், தாமரை பன்னீர் என்ற பெயரில் 123 புத்தகங்களும், தாமரை முரளி என்ற பெயரில் 115 புத்தகங்களும், ஜோதி ஹரிஹரன் என்ற பெயரில் 114 புத்தகங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, உயர் நிலைக் குழுவிடம் புத்தகப் பட்டியல் வைக்கப்பட்ட நாளான பிப்ரவரி 5-ஆம் தேதி மட்டும் தாமரை முரளி பெயரில் 48 புத்தகங்களுக்கும், லட்சுமி மோகன் பெயரில் 48 புத்தகங்களுக்கும் சர்வதேசத் தர புத்தக எண்கள் பெறப்பட்டதாக எஃப்ஐஆர் குறிப்பிடுகிறது.

இரண்டு பதிப்பகங்களிலும் ஒரே ஆசிரியர்கள்; ஒரே புத்தகங்கள்

ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொடர்பான சர்வதேசத் தர புத்தக எண் பதிவுகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்துள்ளது. அந்தப் பதிப்பகத்தின் கீழ் மொத்தம் 2,923 புத்தகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 2,690 ஆங்கிலப் புத்தகங்களும் 174 தமிழ் புத்தகங்களும் அடங்கும்.

அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் 74 ஆசிரியர்களின் பெயர்கள் பொதுவாக இடம்பெற்றுள்ளன. சுமார் பத்து புத்தகத் தலைப்புகள் இரண்டு பதிப்பகங்களிலும் ஒரே ஆசிரியரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று புத்தகங்கள் இரண்டு பதிப்பகங்களிலும் வெவ்வேறு ஆசிரியர்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணை அறிக்கை கூறுகிறது.

இதற்கு உதாரணமாக, 'Deepfakes: The Coming Infocalypse' என்ற புத்தகம் அகல் விளக்கு பதிப்பகத்தில் மனிஷா சரவணன் என்ற பெயரிலும், ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸில் சாருலதா விவேக் என்ற பெயரிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புத்தகத்தின் உண்மையான ஆசிரியர் நினா ஷிக் என்றும், அந்தப் புத்தகம் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி ஆசிரியர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட புத்தகங்கள்

இந்த இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களை ஆய்வு செய்தபோது, மோகன் இணையதளங்கள் மற்றும் இணையச் செயலிகளில் இருந்து தகவல்களை எடுத்ததும், சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியும், புனைவு ஆசிரியர் பெயர்களில் புத்தகங்களை உருவாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஃப்ஐஆர் கூறுகிறது.

அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கங்கள் தெளிவற்றதாகவும், தொடர்பற்றதாகவும், தவறாக வழிநடத்தக்கூடியதாகவும், மொழிநடையில் தரமற்றதாகவும் இருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் பொது நூலகத்துக்குத் தேவையான கல்வி அல்லது தகவல் மதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'Tourism: Principles, Practices and Philosophies' என்ற புத்தகம் எமிலி லாசன் என்ற ஆசிரியரின் பெயரில் வெளியிடப்பட்டிருந்தாலும், அதன் உள்ளடக்கங்கள் வேறு புத்தகங்களிலிருந்து நகலெடுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த ஆசிரியருக்கான இணையதளம் போலியானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஃப்ஐஆர் கூறுகிறது.

'செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள்'

எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
Getty Images
கோப்புப்படம்

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் தரமற்ற புத்தகங்களும், நூலகங்களில் இடம்பெறத் தகுதியற்ற புத்தகங்களும் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவற்றின் ஆசிரியர் விவரங்கள் மற்றும் பதிப்புரிமை தொடர்பான அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து அதிகாரிகள் பணியிடை நீக்கம்

இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் ஐந்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள்:

1. எஸ். காமாட்சி - சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணைத் தலைமை நூலகர் (பொறுப்பு).

2. தினேஷ் குமார் - மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொறுப்பு).

3. வி.சந்தானகிருஷ்ணன் - மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்; கோவை பெரியார் அறிவுலகத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் இருந்தவர்.

4. எஸ். சந்தான கார்த்திகேயன் - சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்.

5. ஜே. ஜூலியட் - பொது நூலகத்துறை இயக்குநரகத்தின் தலைமை கணக்கு அலுவலர்.

இந்த ஐந்து பேரும் புத்தகக் கொள்முதல் நடைமுறையை ஒருங்கிணைத்து மேற்பார்வையிட அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும், புத்தகக் கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைக் குழுவிலும் இடம்பெற்றிருந்ததாகப் பள்ளிக் கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் இந்தப் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

பெருமாள் முருகன் எழுப்பிய கேள்விகளில் தொடங்கிய சர்ச்சை

எழுத்தாளர்கள், பதிப்பகம், அகல் விளக்கு, மோகன், கைது, நூலக ஆணை, வழக்கு, பதிப்பாளர்
BBC
எழுத்தாளர் பெருமாள் முருகன்

கோவை பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் தரம் மற்றும் உள்ளடக்கம் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றது.

சில புத்தகங்களில் வரலாற்றுத் தகவல்களில் பிழைகள், இலக்கிய நூல்கள் குறித்த தவறான குறிப்புகள், ஆசிரியர் விவரங்களில் சந்தேகங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தப் புகார்கள் அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் நடைமுறை தொடர்பான முந்தைய நீதிமன்ற வழக்குகளின் பின்னணியிலும் முக்கியத்துவம் பெற்றன.

பள்ளிக் கல்வித்துறைச் செயலர் நவம்பர் 6-ஆம் தேதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நவம்பர் 10-ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

நவம்பர் 16-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!