Skip to main content

Advertisement

வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
IMD

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 26-ஆம் தேதி காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.

வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
IMD

மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு

அர்னாப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26 நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்பிறகு வடமேற்கு திசையில் நகரும் புயல், அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையே, பபட்லா – விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
IMD

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திங்கள்கிழமை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும் மின்னலும் ஏற்படக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது.

மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை மற்றும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இன்று (அக்டோபர் 26) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் கனமழையால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தியாகதுருகம், சின்னசேலம், பொரசக்குறிச்சி, விருகாவூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
BBC
கிருஷ்ணகிரியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

பாதிப்புகள் என்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கின்ன கொரை பகுதியில் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவுகளும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

மலைப்பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கோவை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் எம்.எம். வார்டுக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

கோவை செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் எதிரே உள்ள அசோக் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, அமைச்சர் சம்பத்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் 13 மற்றும் 14-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே சாலையின் குறுக்கே பாறை விழுந்ததையடுத்து 40ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அவ்வழியாக வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 6:30 மணி வரையான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 27.07 மில்லி மீட்டரும் அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!