
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் !
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 19 லட்சம் பேரைத் தங்க வைக்கும் வகையில், 8 ஆயிரத்து 300-க்கும் அதிமமான வெள்ள நிவாரண மையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக, தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
அப்பருவமழை, இம்மாத இறுதியில் தொடங்கி, அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------
இதனிடையே, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, வழக்கமாக வெள்ளம் ஏற்படாத பகுதிகளே அதிக கவலையளிப்பதாக, NADMA தெரிவித்துள்ளது !
இந்தப் பருவமழைக் காலத்தில் வெள்ளச் சம்பவங்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வழக்கமாக வெள்ளம் ஏற்படாத பகுதிகளில், அதனை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறைவாக இருக்கலாம் என Nadma கூறியது.
அதே வேளை, அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில், அதனைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் சிறந்த முறையில் இருப்பதாகவும் அது சொன்னது.
---------
மற்றொரு பக்கம், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பொதுமக்கள் பதற்றத்தில் உணவுப் பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
மாறாக, தங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளும்படி, NADMA கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், பொதுமக்களிடையே பதற்றததை ஏற்படுத்தி, பொருட்களை வாங்கிக் குவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லலாம் என NADMA எச்சரித்தது.
---------
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 5 முதல் 13-ஆம் தேதி வரை, வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தல் முறையை மேற்கொள்ள, உயர்கல்விக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது !
அத்திருநாளைக் கொண்டாடும் மாணவர்களுக்கு வசதியாக, அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
--------
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால், வயது மூப்பு காரணமாக இன்று தனது 93-ஆவது வயதில் காலமானார் !
ரோஜா திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்த அவர் சதிலீலாவதி, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம் ஆகிய படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை ஈர்த்தார்.
2000-ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு அம்மாவாகவும் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த, அந்நியன் திரைப்படத்தின் விக்ரமிற்கு பாட்டியாகவும் நடித்திருந்தார்.