Skip to main content
சிறு தொழில் முனைவோருக்கான ஒதுக்கீடு !

 

 

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், சிறு தொழில் முனைவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சிறு தொழில் முனைவோர், உதவி பெற வேண்டியவர்களைப் பரிந்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது !

உதவி உண்மையாகத் தேவைப்படும் மற்றும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் ஆற்றல் கொண்ட சிறு வியாபாரிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய, அந்தப் பரிந்துரைகள் அவசியமாவதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிறு தொழில் முனைவோர் நடத்தும் பல கடைகளும், வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

இதன் வழி, உள்ளூர் சமூகத்தினருக்கு வருமானத்தை உருவாக்கவும் அவை உதவுவதாக, Datuk Seri Anwar Ibrahim சொன்னார்.

அக்டோபர் 9-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

----------

இதனிடையே, 2027 சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது !

சிலாங்கூர், தொடர்ந்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், அதன் பலன்கள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய, இவ்விரு தரப்பினரின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என Menteri Besar தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிலாங்கூரில் உள்ள மருத்துவமனைகளில் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுவதற்கான ஆதரவுத் திட்டங்களையும், மாநில அரசு ஆராயும் என அவர் கூறினார்.

அம்மாநில வரவு செலவுத் திட்டம், நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில், அனைவரையும் உட்படுத்திய பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதில், Prasarana Malaysia, தொடர்ந்து உறுதியாக உள்ளது !

அதற்கிணங்க, அண்மையில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருடன் கலந்துரையாடல் அமர்வு ஒன்று நடத்தப்பட்டதாக, Prasarana தெரிவித்தது.

அந்தக் கலந்துரையாடல் மூலம், மாற்றுத்திறனாளி பயணிகள் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அந்நிறுவனம் கூறியது.

இதன் வழி, பொதுப் போக்குவரத்து வசதிகளையும், பயண அனுபவத்தையும் மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை, முன்னெடுக்க முடியும் எனவும், அது சொன்னது.

---------

தோட்டத்தொழில், மூலப்பொருள் துறை அமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad, இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை வழிநடத்தவுள்ளார் !

நாளை முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயணம், இந்திய சந்தையுடன் மலேசியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

---------

தலைநகர் டூத்தா டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வர்த்தக வாகனங்களை ஓட்டிய இரு ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக, சாலை போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!