
சரவாக்கில் Serian-னில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது !
அங்கு, காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு 500-ரைத் தாண்டி அபாய கட்டத்தை எட்டியதால், மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அப்பகுதியில் நிலவும் காற்றின் தரம் குறித்து, பிரதமர், சரவாக் பிரிமியர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் வழங்கிய ஆலோசனைகளைப் பரிசீலித்த பின்னர் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் அவசரநிலை அறிவிப்புக்கு இணங்கும்படியும், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, N95 அல்லது அதற்கு இணையான சுவாசக்கவசத்தை அணியும்படியும் மாநில துணை பிரிமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, கூச்சிங்கில் அக்குறியீடு 300-க்கும் மேல் உள்ளது.
Samarahan மற்றும் Sri Aman-னில், காற்றின் தரம் 200-ரைக் கடந்து, மிக மோசமான நிலையில் உள்ளது.
மற்ற 7 இடங்களில், அத்தரம் ஆரோக்கியமற்றதாக இருக்கின்றது.
-------
நாடு முழுவதும், பிப்ரவரி முதல் ஜூன் வரை நடத்தப்பட்ட 35 மேக விதைப்பு நடவடிக்கைகளில், 90 விழுக்காடு நடவடிக்கைகள், வெற்றிகரமாக மழையைப் பொழிய வைத்துள்ளன !
அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில், அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
சிலாங்கூர் ஷா அலாமில், குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ரகசியக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் இருவர் உட்பட எண்மர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
---------
2026 ஆசிய Podcast விருது விழாவில், Astro Audio-வின் SYOK, மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது !
‘Bedtime Tales’ சிறந்த குழந்தைகள் பொழுதுபோக்கு Podcast-க்கான விருதையும், ‘Moon Parenting Podcast’ சிறந்த கல்வி Podcast-க்கான விருதையும், SYOK ஆண்டின் சிறந்த Podcast சமூக உள்ளடக்கப் படைப்பாளர் விருதையும் வென்றுள்ளன.
அந்த விருதுகள், SYOK குழுவின் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளன.