
கெடா சுங்கை பட்டாணியில், நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, இந்தச் சம்பவம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுவது தொடர்பில், கல்வியமைச்சு உள்விசாரணையை நடத்தவுள்ளது !
இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என அமைச்சு கூறியது.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள அனைத்து IPG கல்லூரிகளில், நீரியல் மற்றும் அதிக ஆபத்தான விளையாட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த, அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை, இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என அமைச்சு கூறியது.
பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள், சனிக்கிழமை படகுச் சவாரி செய்யும் போது மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
--------
நாடளவில், இன்று முதல் செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன !
நாட்டில் அண்மைய காலமாக வெப்பம் மற்றும் வறண்ட நிலை நீடித்து வருவதை அடுத்து, அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு, மலேசிய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து, வியாழக்கிழமை வரை, மேக விதைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
--------
இதனிடையே, கெடா, கிளாந்தான் மற்றும் பெர்லிசில் 10 இடங்களில், முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அப்பகுதிகளில், வெப்பம், தொடர்ந்து 3 நாட்களுக்கு 35 முதல் 37 பாகை செல்சியசாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
---------
மற்றொரு பக்கம், கெடா, பேராக், கோலாலம்பூர் உட்பட சில மாநிலங்களில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என Met Malaysia தெரிவித்துள்ளது.
---------
மானிய விலையிலான எரிபொருளை வாங்க, MyKad-டை பிறரிடம் கொடுப்போர், சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என தேசிய பதிவு துறை எச்சரித்துள்ளது !
MyKad என்பது அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாகும் ; இதை வேறு யாரும் பயன்படுத்தவோ, வைத்திருப்பதோ, பிரதிநிதித்துவப்படுத்துவதோ கூடாது என, கிளாந்தானில் அம்மாதிரியான சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அத்துறை அவ்வாறு சொன்னது.