
கட்சி விசுவாசம், தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் என்பதைப் பார்த்து மக்கள் வாக்களித்த காலம் மலையேறிவிட்டது !
நடப்பில் தங்களின் அன்றாட பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் சிறந்த மக்கள் பிரதிநிதியைத் தான் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் Dr Sharmin Kutty Sivaraman.
ஜொகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலிலும் இதே மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியும்.
எனவே தொகுதியைத் தற்காத்துக் கொள்ள விரும்பும் வேட்பாளர்கள், இம்முறையும் வெற்றி உறுதி என அதீத நம்பிக்கையில் இருந்து விடாமல், சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற பெயரைப் பெற்றிருந்தால் தான் வெற்றி கிட்டும் என்றார் அவர்.
இதனிடையே, ஜொகூர் தேர்தல் முடிவுகளை, சனிக்கிழமை இரவு எட்டு மணி தொடங்கி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ராகாவில் கேட்கலாம்; Astro Audio செய்திகள் சமூக ஊடகங்களையும் வலம் வாருங்கள்.
---------
சிலாங்கூர் பந்திங்கில் உள்ள பள்ளியில், மாணவி ஒருத்தி, சக மாணவியை கத்தியால் குத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், காவக்துறை பலரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது !
அவர்களில், சமூக வலைத்தளங்களில் பெயர்கள் பரவிய 10 மாணவர்களும் அடங்குவர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை, தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.
எனவே, விசாரணை சுமூகமாக நடந்து முடிய, சொந்தமாகவே ஒரு முடிவுக்கு வராமல், பொறுமையாக இருக்கும்படி, அத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
---------
இதனிடையே, சம்பந்தப்பட்ட மாணவி, தான் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறி, அதனால் ஏற்பட்ட மனக்கசப்பே இந்தச் சம்பவத்துக்குக் காரணம், என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது !
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில், 10 மாணவர்கள் உட்பட பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இது பகடிவதை காரணமாக நிகழ்ந்ததாக, ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என, காவல்துறை கூறியது.
---------
இவ்வேளையில், கத்திக் குத்துச் சம்பவத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் மாணவியின் தடுப்புக் காவல் நாளையோடு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிக்க, காவல்துறை விண்ணப்பிக்கவுள்ளது !
---------
இவ்வேளையில், இச்சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் எனும் கல்வியமைச்சின் உத்தரவை, மலேசிய ஆசிரியர் தொழிற்சங்க காங்கிரஸ், வரவேற்றுள்ளது !