
நேப்பாளம் - சீனா எல்லைப் பகுதியில் இருந்த 77 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் நேப்பாளத்தின் காத்மாண்டுவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் !
அவர்களை மலேசியாவுக்கு அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரசாங்கப் பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
நேப்பாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து, மலேசியர்களின் நிலைமை குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர், இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அதே வேளை, அப்பெருவெள்ளத்தில் சிக்கிய 55 மலேசியர்களை இன்னும் தொடர்புக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள், சுற்றுலா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு வருவதுடன், காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், அவற்றைச் சேகரித்து சரிபார்த்து வருகிறது.
இதனிடையே, நேப்பாளத்தில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவ, 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ஒப்புதல் அளித்துள்ளதையும், அமைச்சரவை கவனத்தில் கொண்டதாக Fahmi சொன்னார்.
--------
ஜொகூரில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன !
ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி, அம்மாநிலத்தில் சுமார் பத்தாயிரம் டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையை விட, இது 130 விழுக்காட்டுக்கும் அதிகமாகும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டெங்கி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
----------
ஜொகூர் Mersing ஆற்றில், உயிரிழப்பை உட்படுத்திய படகு விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பயணிப் படகுகளில் ஒன்றை இயக்கியவர், 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறார் !
அவ்விபத்தில் இருவர் உயிரிழந்த வேளை, சில பயணிகள் காயமடைந்ததாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
---------
சரவாக்கில், கூச்சிங் மற்றும் Serian-னில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 300-ரைக் கடந்து அபாய கட்டத்தில் உள்ளது !
மற்ற 5 இடங்களில் அக்குறியீடு மிக மோசமான நிலையில் உள்ள வேளை, மேலும் 6 பகுதிகளில், காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது.
---------
ஹஜ் யாத்திரை நிதி வாரியம் தொடர்பான அரச ஆணைய விசாரணை அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஒருவர், ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !