
Negeri Sembilan ஆட்சிக்குழு உறுப்பினராக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் !
மாநில அரசு, அதனை அறிவித்துள்ளது.
இன்று பதவியேற்ற 10 ஆட்ச்சிக்குழு உறுப்பினர்களில், இந்திய சமூகத்திற்கான பிரதிநிதி இடம்பெறவில்லை.
அதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகத்தில் ,இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்நியமனம் மேற்கொள்ளப்படும் என மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநில சமஸ்தானாதிபதி முன்னிலையில், இன்று புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக, 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
அவர்களில், தேசிய முன்னணி சார்பில் எண்மரும், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அண்மைய தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, மொத்தம் 25 இடங்களில் வெற்றி பெற்று, புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.
----------
மலேசிய விமானப் போக்குவரத்து குழுமமான MAG, ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது !
அக்குழுமம், தனது 1,260 விமானிகளுக்கும், கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பரிசோதனையை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யாத விமானிகள், பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவர் என MAG கூறியது.
அண்மையில், இந்தோனேசியாவில், போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக ,மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைதானதே, அந்நடவடிக்கைக்குக் காரணம்.
---------
இதனிடையே இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானி, மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை அவர் இயக்கவில்லை என்றும், வெறும் பார்வையாளராகவே பயணித்தார் என்றும் MAG குழுமம் விளக்கமளித்துள்ளது !
தகுதி வாய்ந்த இரு வேறு விமானிகளாலேயே, சம்பந்தப்பட்ட விமானம் பாதுகாப்பாக இயக்கப்பட்டதாக அக்குழுமம் உறுதிபடக் கூறியுள்ளது.
அந்த உதவி விமானி, கடந்த 2 நாட்களாகவே பணியில் இருக்கவில்லை என்றும் அது சொன்னது.
----------
இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபிற்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !
இதையடுத்து, அவர் மீதான வழக்கு விசாரணை, இம்மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான இந்த வழக்கானது, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரித்து வரும், சொத்துப் பிரகடனம் தொடர்பானதாகும்.
---------
தாய்லாந்து Bangkok-கில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், இளைஞர் ஒருவர் தனது தாத்தா மற்றும் பாட்டியை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது !
பள்ளி மாணவரான அச்சந்தேக நபர், தனது தாத்தாவுக்குச் சொந்தமான துப்பாக்கியை பயன்படுத்தி, அவ்விருவரையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், பள்ளிக்குச் சென்ற அவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சிலர் உயிரிழந்த வேளை, பலர் காயமடைந்ததாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
அச்சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அவனும் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.