
அடுத்தாண்டு, 6 வயது மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் சேரவிருப்பதை முன்னிட்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது !
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 2,600 புதிய வகுப்பறைகள் கட்டப்படுகின்ற வேளை, அடுத்தாண்டு 3,150 ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதுவரை ஏறக்குறைய 74-ஆயிரம் மாணவர்கள், பதிவு செய்துள்ள நிலையில், இது ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட 4 லட்சம் மாணவர்கள் எனும் இலக்கை விட, குறைவாக உள்ளது என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
---------
பொதுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான இடங்கள் விற்பனை செய்யப்படுவதோ, அல்லது முறைகேடான வழிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதோ இல்லை என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது !
கல்வித் தகுதி, குறிப்பிட்ட பாடத்திட்டங்களுக்கான தேவைகள், இடவசதி, அங்கீகாரத் தரநிலைகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுவதாக, Berita Harian-க்கு வழங்கிய விளக்கத்தில், அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது.
மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த கூற்றுகளையும், அமைச்சு மறுத்தது.
----------
பயனர்களின் வயது சரிபார்ப்பு தேவைகளை பின்பற்றத் தவறும் சமூக ஊடக தளங்களுக்கு, அதிகபட்சம் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் !
16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முறையில், பயனரின் வயது மட்டுமே சரிபார்க்கப்படும்; அடையாளம் உறுதிப்படுத்தப்படாது என, தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வயது சரிபார்ப்புக்காக சேகரிக்கப்படும் தகவல்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
---------
தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், காற்பந்து திருவிழாவை மையமாகக் கொண்டு, சட்டவிரோத பந்தயம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 1,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
---------
KL Bangsar-ரில், பள்ளி வளாகத்தில் மரமொன்று விழுந்து, இரண்டு வாகனங்கள் சேதமடைந்த நிலையில், அதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை, Bomba உறுதிப்படுத்தியுள்ளது !