
2026 தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு, தேசப்பற்று உணர்வை மேலும் வலுப்படுத்த, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது !
அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில், ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என, தகவல் துறை தெரிவித்துள்ளது.
Astro Audio செய்தி பிரிவிடம் தொடர்ந்து பேசிய JAPEN, தேசப்பற்று என்பது, தேசியக் கொடியை பறக்கவிடுவதில் மட்டுமல்ல.
அது, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது, ஒருவரையொருவர் மதிப்பது மற்றும் ஒற்றுமையைப் பேணுவது மூலமும் வெளிப்பட வேண்டும், என்றது.
தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, JAPEN ஏற்பாடு செய்த Merdeka ஊடக வருகை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்று Astro Audio செய்தி பிரிவுக்கு வருகை தந்தபோது, அத்துறை இதனைத் தெரிவித்தது.
அக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, JAPEN மேற்கொள்ளும் இந்த ஊடக வருகை நிகழ்ச்சியின் முதல் இடமாக Astro அமைந்துள்ளது.
---------
போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசிய விமானி ஒருவர், இந்தோனேசியாவில் கைதானதைத் தொடர்ந்து, பல மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது !
விமான நிலையப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய, காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள், நடவடிக்கை எடுக்கும்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமானிகளுக்கான பின்னணி மற்றும் சுகாதார பரிசோதனை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யும்படி, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக, Datuk Seri Fahmi Fadzil தெரிவித்தார்.
கடந்த வாரம், 70-ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது செய்யப்பட்டார்.
----------
ஜொகூரில், இவ்வாண்டு டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது !
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான, கிட்டத்தட்ட நான்காயிரம் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 7,235-ஆக உயர்ந்துள்ளது.
அச்சம்பவங்களில், சுமார் 90 விழுக்காட்டு சம்பவங்கள், ஜோகூர் பாரு மற்றும் கூலாய் மாவட்டங்களிலேயே பதிவாகி வருவதால், அந்த இரண்டு மாவட்டங்களில்தான், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
----------
மற்றொரு பக்கம், ஜொகூர் BATU PAHAT-டில், சடலம் ஒன்றை வலையில் சுற்றி மூட்டையாக கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவம் தொடர்பில், முக்கிய சந்தேக நபர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்கள், 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகின்றனர் !
---------
கோலாலம்பூர் Taman Desa-வில், ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளைக்காரர்கள், 77 வயது மூதாட்டி ஒருவரை, சுமார் இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டு வாயை அடைத்து வைத்து, 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் !