பயனர்களின் அடையாளம் மற்றும் தொலைபேசி எண்களைச் சரிபார்ப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் !
WhatsApp வழி மேற்கொள்ளப்படும் மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொடர்பு துறை அமைச்சு அதனை பரீசீலித்து வருகிறது.
இதனிடையே, மலேசிய பல்லூடக ஆணையம் அல்லது தொடர்புத் துறை அமைச்சின் அதிகாரிகள் எனக் கூறி வரும் மோசடி அழைப்புகள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.
சந்தேகத்திற்குரிய அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், மோசடிகளுக்கு ஆளானால் உடனடியாக 997 எனும் தேசிய மோசடி அழைப்பு எண்ணில் புகார் அளிக்குமாறும் அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil அறிவுறுத்தியுள்ளார்.
--
சிலாங்கூரில் கடந்த 10 ஆண்டுகளில் வெள்ள அபாயப் பகுதிகள் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகவே குறைந்துள்ளன!
2016/2017ஆம் ஆண்டில் 328ஆக இருந்த அவ்வெண்ணிக்கை, தற்போது 56ஆகக் குறைந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மாநில அரசு மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடிகால் மேம்பாட்டுப் பணிகளால் அம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எஞ்சியுள்ள 56 வெள்ள அபாயப் பகுதிகளிலும் கவனம் செலுத்துவதோடு, வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
--
இதனிடையே, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஆகக் குறைந்துள்ளது.
ஆனால், பேராக்கில் அவ்வெண்ணிக்கை நேற்று 300க்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பினாங்கில் செபராங் பெராய் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறை நெருங்குகிறது.
--
தலைநகரில் இரு இடங்களில் ஏற்பட்டுள்ள காற்றுத்தூய்மைக்கேடு குறியீட்டு அளவு குறித்து, சுற்றுச்சூழல் துறை விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
செராஸில் காற்றின் தரம் மிதமாகக் காணப்பட்டாலும், கடந்த மூன்று நாட்களாக பத்து மூடாவில் அது ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.
--
தலைநகரில், காவல்துறையின் சாலைத் தடுப்பில் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீஸ் வாகனத்தை மோதி ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 20 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பிலான இரு பழைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ள அந்த ஆடவர், விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
--
கெடாவில், ஐயாயிரதுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு 3,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என மந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor அறிவித்துள்ளார்.
--