2020ஆம் ஆண்டு கடுமையான ஆண்டாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாண்டு சற்று வித்தியாசமான தீபாவளியை நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீபாவளியைப் பாதுகாப்பாக கொண்டாட அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (SOP) பின்வருமாறு:
நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKPB) மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKPD) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படவில்லை.
Advertisement
மேலும், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள் தீபாவளி முதல் நாள் மட்டுமே கோயில்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்வோர் MySejahtera செயலி பயன்படுத்துதல் அல்லது வருகை பதிவில் பெயர்களை எழுதுதல் மற்றும் உடல் வெப்பநிலையைச் சோதித்தல் அவசியமாகும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வழிபாட்டு நேரம் முடிந்தவுடன் கிருமி நாசினி மூலம் ஆலயங்களில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தியர்கள் வீட்டில் விருந்தினர்களை அழைத்து உபசரிக்க அனுமதி உண்டு. ஆனால், ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக் கூடாது. கொண்டாட்டத்தில் கோவிட் 19-ஐ மறந்துவிடாதீர்கள். ஒன்று கூடலின் போது விருந்தினர்கள் சுவாசக் கவசம் அணிவதும் தூர இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.
இருப்பினும், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கடுப்பாட்டு ஆணை பகுதிகளில் வசிப்போர் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரவலைக் குறைக்க புதிய இயல்பை ஏற்று பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவோம்! இதுவும் கடந்து போகும் என நம்புவோம்!