
நம் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத ஒரு முகம் அப்பா. நாம் இந்த உலகத்தை முதலில் பார்ப்பதற்கு முன்னமே நமக்கு அம்மா வயிற்றில் முத்தம் கொடுத்து எப்போது நாம் வருவோம் என ஆசையுடன் கார்த்திருந்தவர் அப்பா. ஆனால், தாயின் அன்பைப் போல் அதிகம் பேசப்படாதது தந்தையின் பாசம்.
Advertisement
தாயின் அன்பு எல்லோருக்கும் தெரியும்படி தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் பாயும் நீரோடை போன்றது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க அப்பாவின் ஒவ்வொரு சொல்லும் நம்மை வாழ்க்கையில் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மந்திரமாகவே மாறியிருப்பதை நாம் முன்னேறிய பின்பே தெரிந்துகொள்வோம்.

தாய் கருவில் பத்து மாதம் தான் சுமக்கிறாள். தந்தையோ தன் பிள்ளைகளை வாழ்நாளெல்லாம் நெஞ்சிலும் கண்ணிலும் வைத்து சுமக்கிறார். பிள்ளைகளை நோயிலிருந்து, ஆபத்திலிருந்து காக்கவும் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து சொந்த காலில் நிற்க வைக்கவும், ஆளாக்கவும், பிள்ளையின் முன்னேற்றத்தில் கண்கள் கசிய நிற்கும் தந்தையை போல் வேறு யார் உண்டு? பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமன்றி ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை.
அப்பாவின் அன்பான சொற்கள் மட்டுமல்ல அவரது கண்டிப்புகளும் நமது வாழ்க்கையை உயர்த்தும் என்பதை உணர்ந்து தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்போம். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கு ராகாவின் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.