தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம். உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆவது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது.

அன்னையின் வயிற்றில் ஐந்திரண்டு மாதங்களாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. அம்மாக்களைப் போல் அப்பாக்களுக்குப் பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும் பெருமையும் தருபவர். அவருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
Advertisement

குடும்பத்தைப் பேணி காப்பதில் தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல தந்தையின் தியாகம். சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார். பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது.

தான் பார்க்காத உலகத்தை என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி காட்டுபவர் தந்தை. இந்நாளில் நமது தந்தை நமக்காக செய்த தியாகங்களையும் அனுபவித்த கஷ்டங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு!
ஓராண்டு காலமாக பெருந்தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், தன் பிள்ளைகளுக்காக, குடும்பத்திற்காக மட்டுமின்றி நாட்டுக்காகவும் உழைத்த அனைத்து தந்தைகளின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எங்களின் நன்றிகள்.
இந்த நாளில் உலக வாழ் அனைத்து தந்தையருக்கும் ராகாவின் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!