Skip to main content

Advertisement

Entertainment

மலேசியாவின் 64வது சுதந்திர தினம்

31 ஆகஸ்ட் 2021 அன்று மலேசியாவின் 64ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் முதலில் தங்களை “மலேசியர்”களாக உணர்தல் வேண்டும். முதலில் நான் மலேசியன் என்ற உணர்வே இத்தனை ஆண்டுகளாக எவ்வித இன மோதலும் கலவரமும் இல்லாத நாடாக கண்டிருந்த மலேசியா இன்னும் நூறாண்டுகளுக்கு சிறப்பாக வெல்ல வழிவகுக்கும்.

மலேசியாவின் 64வது சுதந்திர தினம்

இந்த ஆண்டும் பரிவுமிக்க மலேசியா என்ற கருப்பொருளில் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில், இன மத வேறுபாடின்றி மலேசிய மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வேளையில் நாட்டின் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக இருக்கும் தேசியக் கோட்பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.

Advertisement

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

இந்த மலேசியத் தேசிய முதல் கோட்பாட்டில், எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் குறிப்பிடாமல், அனைத்து மக்களையும் குறிப்பிடும் வகையில், இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற பொதுமைக் கொள்கை எடுத்துரைக்கப்படுகின்றது. இஸ்லாம் மதம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இருப்பினும், இங்கு வசிக்கும் மற்ற இன மக்கள் தங்களின் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் 64வது சுதந்திர தினம்

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

இந்நாட்டின் குடிமகனாகிய நாம், பேரரசருக்கு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும். நாம் நமது பணிகளை நேர்மையான முறையில் இந்நாட்டிற்கு அர்பணிக்க வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் பொருளாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டம் ‘Red Constitutional Commission’ ஆல் உருவாக்கப்பட்டது. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு மலேசியரும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இக்கோட்பாடு உணர்த்துகிறது.

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

ஒவ்வொரு குடிமக்களும் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்து சட்ட முறைப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. சட்டம் எனப்படுவது அடிப்படையில் அனைவருக்கும் சமம். மலேசிய ஆட்சியாளர்களும் மலேசிய மக்கள் அனைவரும் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும், பேண வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை இந்தக் கோட்பாட்டின் உட்கருத்தாகும். நாம் சட்டத்தை மதித்து நடந்தால், அமைதியான சுதந்திரமான சூழலில் சிறப்புற்று வாழ முடியும் என்பதை இக்கோட்பாடு உணர்த்துகிறது.

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

ஐந்தாவது கோட்பாடு, நம்மைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்யும் நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் ஒட்டி இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் முறையாகப் பேணிப் பின்பற்றும் வகையில், அவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சுபிட்சத்துடனும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ இக்கோட்பாடு வழிவகுக்கும்.

மலேசியாவின் 64வது சுதந்திர தினம்

நாட்டின் சிறந்த மலர்ச்சிக்கும் மக்களின் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் ருக்குன் நெகாராவைவிட சிறந்த கோட்பாடு இருக்க முடியாது. அனைத்து மலேசியர்களுக்கும் ராகாவின் தேசிய தின வாழ்த்துகள்!

Related Article

RAAGA Aaha Siranta Isai!