மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 75வது பிறந்த நாள் இன்று. ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், இந்திய சினிமாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்பட்டார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் உலா வந்தவர். 1996ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகிய இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ் திரையுலகம் எத்தனையோ பின்னணி பாடகர்களைக் கண்டுள்ளது. அப்படி மற்ற பாடகர்களுக்கு இல்லாத ஒரு தனித்துவம் எஸ்.பி.பிக்கு இருந்தது. அது என்னவென்றால், துள்ளல் அல்லது பெப்பி என்று சொல்லலாம். பவர் என்று சொல்லலாம். தனது ஒரே பாடலில் அவரால் சோகமாகவும், மகிழ்ச்சியான ஸ்டைலிலும் குரலை மாற்றி விட முடியும். அழுதபடியே பாட்டை ஆரம்பித்து… ரப்பப்பா, ரபப்பா... என்று துள்ளலோடு முடிக்க முடியும். துள்ளலோடு ஆரம்பித்து சோகம் இழையோடும் குரலோடு அவரால் பாடலை முடிக்க முடியும். இது எஸ்.பி.பிக்கு மட்டுமே உண்டான ஒரு தனித்திறமை.
Advertisement

ஆயிரம் நிலவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ, காட்டுக்குள்ள மனசுக்குள்ள, நான் போகிறேன் மேலே மேலே, நான் தான் இனிமேலு வந்து நின்னா தர்பாரு என அரைநூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த இந்தக் காந்தக் குரலில் தான், காதல், நட்பு, சோகம் என எல்லா உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் புகுத்தியது.
கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். 16 மொழிகளில் 45,000 பாடல்களுக்கு மேலாக பாடியவர்! ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணி பாடகர் இவர் ஒருவரே.
தலைமுறைகளைக் கடந்து வசீகர காந்தக் குரலோன்! பாடும் நிலா எஸ்.பி.பியை அவரது பிறந்த நாளில் இன்று ராகா நினைவு கூறுகிறோம்.